அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக கோவா சென்றிருக்கிறது படக்குழு. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, பரதன் உள்ளிட்ட பலர் விஜய்யிடம் கதை கூறினார்கள்.
மற்றவர்கள் கூறிய கதையை விட பரதன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் தனது அடுத்த படத்தின் இயக்குநராக பரதனை முடிவு செய்திருக்கிறார் விஜய். இப்படத்தை 'வீரம்' படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய்யுடன் நடிக்கும் நடிகர்களின் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது.
விஜய், ஸ்ரேயா, நமீதா உள்ளிட்ட பலர் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவர் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.