"போலி' சாதனைக்காக தியேட்டர்களை பிளாக் செய்ய மாட்டோம் என 'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இந்தியாவில் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தி இருக்கிறது.
'பாகுபலி' வெளியாகி 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், இயக்குநர் ராஜமெளலி தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
"ஒரு திரைப்படம் 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் ஓடிய காலம் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் ரிலீஸ் தேதியிலேயே 1000 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. இதனால் 3-4 வாரங்களில் படத்தை பெரும்பாலானோர் பார்த்துவிடுகின்றனர். சில பெருந்திரையரங்குகள் மட்டும் அதன் பிறகும் அப்படத்தை திரையிடுவதைத் தொடர்கின்றனர்.
ஓரிரு வாரங்களிலேயே படங்கள் திரையரங்குகளில் நிறுத்தப்படுவதால் சில நேரங்களில் நடிகர்களின் ரசிகர்கள் குறிப்பிட்ட ஒரு திரைப்படத்தை கூடுதலாக சில நாட்களுக்கு திரையிடுமாறு கேட்கும்போது சற்று வேதனையாக இருக்கிறது. சில ரசிகர்கள் தங்கள் கைக்காசைக் கொடுத்து படத்தை திரையிடச் செய்கின்றனர், சில இடங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்களுக்காக அவர்களே திரைப்படத்தை திரையிடுகின்றனர்.. போலியான சாதனைகள் மூலம் நாம் பெறப்போவது என்ன நண்பர்களே?
ரசிகர்கள் எங்களுக்கு மறக்கமுடியாத வெற்றியை அளித்துள்ளனர். இதை நாங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வோம். இதைவிட வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
திரையரங்குகளை மொத்தமாக பிளாக் செய்து கொள்ளும் நோய் அண்மைக் காலமாக நம் சினிமாத் துறையில் ஊடுருவியிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தும் நேரம் வந்துவிட்டது. பங்குகளை வழங்கும் திரையரங்குகளில் 'பாகுபலி' தொடர்ந்து திரையிடப்படும். அதற்கு வாய்ப்பில்லாதபோது புதிய படங்களுக்கு நாங்கள் வழிவிடுவோம். போலி சாதனைக்காக திரையரங்குகளை பிளாக் செய்ய மாட்டோம்" என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்திருக்கிறார்.
'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறது.